Friday, June 19, 2009
18 ஆண்களும் 18 பெண்களும்!
அருப்புக்கோட்டை கல்லூரியில், இளங்கலை அறிவியல் வகுப்பில் 18 ஆண்களும் 18 பெண்களும், படித்தோம் என்பதை விட இருந்தோம் என்பதே சரி. கல்லூரிக்குச் செல்வதே வாழ்வின் சாதனையாக கருதிய நாங்களும், படிப்பின் அவசியம் அறிந்த பெண்களும் என அது ஒரு பொருந்தா கூட்டணி. அன்றைய சூழலில், பெண்களை பகடி செய்வதை, தமது பிறப்புரிமையாக கருதிய மாணவர்களால் துன்பமோ அல்லது இன்பமோ(!) அடைந்த அந்த 18 பெண்கள், வகுப்பிற்கு வருதே அழகு. நம் மக்களின் மேற்கத்திய மோகத்தால் அழித்தொழிக்கப்பட்ட, தாவணி, தலையில் பூவுடன், புத்தகங்களை தம் மார்போடு அணைத்து அவர்கள் வகுப்பில் நுழையும் போது ஏற்படும் உணர்வை, நயாகரா நீர்வீழ்ச்சியில் Maid of the Mist டில் பெறலாம். புத்தகங்கள் இப்பெண்களின் மனதிற்கு அருகேயும், அதே புத்தகங்கள் எங்கள் கைகளில், மனதில் இருந்து தொலைவிலும் இருந்தது, எங்கள் கல்வித் தரத்திற்கான குறியீடே. பெண்களை மிரளச் செய்து சுகம் காணும் நண்பனொருவன், முருங்கை காயை பெண்கள் அமரும் இடத்தின் மேலே ஒழித்து வைத்து, அவர்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்த உடன், வகுப்பின் மேற்க்கூரையை உலுக்கி, முருங்கை காயை கீழே விழச் செய்தான் (சாமி சத்தியமா அந்த காரியத்தை நாஞ் செய்யலை). 18 பூக்களும், புயலாகி கல்லூரி முதல்வர் அறையில் கரை கடந்ததை, ஒரு வார காலம் நாங்கள் வகுப்பறையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டபோது அறிந்து கொண்டோம். அதை தொடர்ந்து, நடந்த விசாரனையில் "ஒரு கல்லூரியின் கழிப்பறை அக்கல்லூரி மாணவர்களின் தரத்தை பிரதிபளிக்கும். உங்கள் வகுப்பறை மற்ற கல்லூரிகளின் கழிப்பறையை விட கேவலம்" என்றார், முதல்வர். சமீபத்தில், டெல்லியில் இருந்து சென்னை சென்ற ஏர் இந்தியா விமான கழிப்பறையில் நடிகை குஷ்பு பற்றி எழுதப்பட்டு இருந்த வாசகம், அவ்விமான பயணிகளின் தரத்திற்கான குறியீடா என்பதை ஆராய்வது இப்பதிவின் நோக்கம் அல்ல! கல்லூரியின் மூன்றாம் ஆண்டு தேர்வு நேரம், என்னுடைய இயற்வேதியல் புத்தகத்தை காணவில்லை. அப்புத்தகத்தை தேடி சில பெண்களின் வீட்டுக்கு சென்ற போது, எங்களது "முருங்கை காய்" க்கான எதிர்வினை கிடைத்தது. ஆனால், உமா மகேஸ்வரி என்ற பெண் எங்களை அன்போடு வரவேற்றதுடன், என்னுடைய புத்தகம் யாரிடம் இருக்கிறது என்பதையும் சொன்னார். அன்று உமா கொடுத்த "ரஸ்னா", அட்லாண்டா கோக் தலைமையகத்தில் நான் நக்கிய (50 வகை கோக் இருந்துச்சு, அதுனால குடிக்காம, கொஞ்சமா...) குளிர்பானங்களை விட பல மடங்கு உயந்தது என்பதை எங்கூரு முனியப்பசாமி கோயில்ல சத்தியம் பண்ணி சொல்லளாம். 18 ஆண்களால், மிக கடுமையாக பகடி செய்யப்பட்ட, அதனால் பாதிக்கப்பட்ட உமாவின் விருந்தோம்பலை, நினைக்கும் போது ஜெரோம் கம்மிங்ஸின் "A friend is one who knows us, but loves us anyway" என்ற வாசகம் தான் நினைவுக்கு வருகிறது. இன்னைக்கு நானெல்லம் அமெரிக்காவில விஞ்ஞானின்னு சொல்லிக்கிட்டு அலையிரதுக்கு, அன்னைக்கு நீங்க செஞ்ச உதவியும் ஒரு காரணம், நல்லா இருங்க உமா!
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
கிச்சா சார் நல்ல பதிவு!
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்... உமா உங்கள ஒறுத்திருக்காங்க.. நீங்க சும்மா திரும்பி வந்திட்டீங்களா? ஹாஹாஹ!
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்... உமாக்கா உங்கள ஓறுத்திருக்காங்க.. நீங்க சும்மா திரும்பி வந்திட்டீங்களா? என்னா சேர் நீங்க? ஹிஹி!
//இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்... உமாக்கா உங்கள ஓறுத்திருக்காங்க.. நீங்க சும்மா திரும்பி வந்திட்டீங்களா? என்னா சேர் நீங்க? ஹிஹி!//
புல்லட் பாண்டி சார், உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!
இது ஒரு நன்றி சொல்லல் பதிவே! உங்களை பற்றி என்னுடைய பிறிதொரு பதிவில் எழுதி இருப்பது உங்களை பாதித்திருக்காது என நம்புகிறேன்.
Post a Comment