Sunday, June 28, 2009
இலங்கையில் ராணுவ புரட்சி சாத்தியமா?
ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று ஜனநாயக நாடாக இருந்த பர்மா, 1962ல் ராணுவ ஆட்சியின் கீழ் வந்தது. "வன்முறையின் தோல்வி" பற்றி அறிந்த ஆங் சான் சுக்யி, அஹிம்சை வழியில் ஏறத்தாழ 20 ஆண்டு காலம் போராடிக் கொண்டு இருக்கிறார். பலன் தான் கிடைத்தபாடில்லை, கிடைப்பதற்கான வாய்ப்புகளும் தெரியவில்லை. துரதிர்ஷ்டவசமாக, போராடி கொண்டிருக்கிறார் என்பதை விட, ஒரு வீட்டில் அமர்ந்திருக்கிறார் என்பதே சரி! இவருடைய கட்சி பெற்ற மாபெரும் தேர்தல் வெற்றியை அங்கீகரிக்க மறுத்த ராணுவ ஆட்சியாளர்கள், இன்றளவும் பர்மாவை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானிலும் பல முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள், ராணுவ அதிகாரிகளால் தூக்கியெறியப் பட்டதை நாம் அறிவோம். வங்காளதேசத்தில் பல முறை ராணுவ புரட்சி ஏற்பட்டது, அத்தகைய ஒரு ராணுவ புரட்சியில் அந்நாட்டு அதிபர் முஜிபூர் ரஹ்மான் கொலை செய்யப்பட்டது வரலாறு. நேபாளத்தில், மன்னரே ஆட்சி அதிகாரங்களை நேபாள ராணுவத்திடம் அளித்த கோமாளித்தனமும் நடந்தது. இப்படி, இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் ராணுவ புரட்சி நடந்துள்ள போதும், இலங்கையில் அத்தகைய ராணுவ புரட்சி இன்று வரை ஏற்படவில்லை. ஆனால் சிங்களவர்களிடம், அந்நாட்டு அதிபர் அளவிற்கே பிரபலம் அடைந்துள்ள சரத் பொன்சேகாவிற்கு அந்நாட்டு அதிபர் ஆகும் அவா இருக்கிறதோ என்ற எண்ணம் எனக்கு ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை. ஏனென்றால், எந்த ராணுவ தளபதியும் பேச முயலாத விடயங்களை பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் இந்த தளபதி. உதாரணமாக, தமிழ் மக்களுடைய பாதுகாப்பை நான் உறுதி செய்வேன் என்று பெயரளவிற்கேனும் ராஜபக்சே பேசி வருகையில், தமிழர்கள் சிறுபான்மையினர், அவர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்க வேண்டியதில்லை என்ற பொன்சேகாவின் கூற்று கவனிக்கத்தக்கது. இத்தகைய கூற்றுகள் சிங்கள பேரினவாதிகளிடம் தன் செல்வாக்கை அதிகரிக்க உதவும் என்பது தவிர வேறு காரணம் என்ன இருக்க முடியும்? அதே போல, தனக்கு பிடிக்காத ராணுவ அதிகாரிகளை ஓதுக்கி தள்ளி, தனக்கு அனுகூலமான அதிகாரிகளை பதவியில் நீடிக்கச் செய்வதன் மூலம், ராணுவத்தில் தன்னுடைய செல்வாக்கை நிலை நிருத்தி, தன் எதிர்கால திட்டங்களுக்கு இலங்கை ராணுவத்தை தயார் செய்து வருகிறாரா, பொன்சேகா? போர் முடிந்த பிறகும், இன்னும் 1 லட்சம் ராணுவ வீரர்களை படையில் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன? இலங்கையில் ராணுவ புரட்சி ஏற்படுமானால், ராஜபக்சே சகோதரர்கள் நிலை என்ன? அப்படி ஒருவேளை ராணுவ புரட்சியில் பொன்சேகா ஈடுபடுவார் என ராஜபக்சே சகோதரர்கள் நினைத்தால், பொன்சேகாவின் கதி என்ன?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment