Tuesday, June 16, 2009

த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளை பாராட்டுகிறேன்

ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் ந‌ரிப்பையூரில், க‌ட‌ல் நீரை குடி நீராக‌ மாற்றும் திட்ட‌ப்ப‌ணிக‌ளை நிறைவேற்றும் ஒப்ப‌ந்த‌க்கார‌ர்க‌ளில் என் ந‌ண்ப‌ரும் ஒருவ‌ர். அத்திட்ட‌ ப‌ணிக‌ளை பார்வையிட‌, என் ந‌ண்ப‌ருட‌ன் சென்ற‌ போது, மீன்பிடி ப‌ட‌கு ஒன்றில் மீன‌வ‌ர் ஒருவ‌ர் சென்ற நிக‌ழ்ச்சி, இன்ற‌ள‌வும் என் நினைவை விட்டு அக‌ல‌வில்லை. கொச்சினில் 4 ம‌ணி நேர‌ம் ப‌ட‌கு ப‌ய‌ண‌ம் சென்ற‌போதோ, மும்பையில் 5 ம‌ணி நேர‌ம் "நில‌வு இர‌வு உண‌வு" என்ற‌ பெய‌ரில் ஒரு ப‌ட‌கில், க‌ட‌லில் விருந்துண்ட‌ போதோ, ந‌யாக‌ராவில், "குதிரை குள‌ம்பு" நீர்வீழ்ச்சியின் ந‌டுவில் ஒரு ப‌ட‌கில் நின்ற‌போதோ ஏற்ப‌டாத‌ உண‌ர்வு, ஒரு தாக்க‌ம், ஒரு பாதிப்பு, ந‌ரிப்பையூரில் ஒரு மீன‌வ‌ன் ப‌ட‌கில் மீன் பிடிக்க‌ சென்ற‌ போது ஏற்ப‌ட்ட‌த‌ற்குக் கார‌ண‌ம், அந்த‌ க‌ட‌ற்க‌ரையில் ஒரு வானொலியில் ஓலித்த‌ க‌விஞ‌ர் வாலியின் "த‌ரை மேல் பிற‌க்க‌ வைத்தான், த‌ண்ணீரில் பிழைக்க‌ வைத்தான்" என்ற‌ பாட‌ல். மீன‌வ‌ர்க‌ளின் துய‌ர‌ங்க‌ளை மிக‌‌ சிற‌ப்பாக‌வும், துல்லிய‌மாக‌வும் எடுத்து சொல்லிய‌ அந்த‌ பாட‌லின் பிண்ண‌னியில், இடுப்பில் குழ‌ந்தையுட‌ன் வ‌ழிய‌னுப்பிய‌ மீன‌வ‌னின் ம‌னைவியும், ஒங்கி எழும் அலைக‌ளும், அஸ்த‌மிக்கும் சூரிய‌னும், உல‌க‌த்தின் தூக்க‌ம் க‌லையாதோ உள்ள‌த்தின் ஏக்க‌ம் தொலையாதோ என்ற‌ பாட‌ல் வ‌ரிக‌ளும், என்னை உலுக்கி விட்ட‌ன‌. இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌து 1998 இல். 11 ஆண்டுக‌ளுக்கு பின்னால் இன்றும், என் மீன‌வ‌ ச‌கோத‌ர‌ர்க‌ளை சிங்க‌ள‌ ஓநாய்க‌ள், க‌டித்து குத‌றுவ‌து ப‌ற்றி எந்த‌ அக்க‌றையும் இன்றி, தொலைக்காட்சியில் ந‌ட‌ன‌ நிக‌ழ்ச்சி க‌ண்ட‌பின், உண்டு உற‌ங்குகிறோம். அன்றே சொன்னார், ந‌ன்றே‌‌ சொன்னார் வாலி "ஒரு நாள் போவார், ஒரு நாள் வ‌ருவார், ஒவ்வொரு நாளும் துய‌ர‌ம், ஒரு சாண் வ‌யிரை வ‌ள‌ர்ப்ப‌வ‌ர் உயிரை, ஊரார் நினைப்ப‌து சுல‌ப‌ம்" த‌ன் ச‌கோத‌ர‌னின் உயிரையே உதிந்த‌ உரோம‌த்துக்கு ச‌ம‌மாக‌ ம‌திக்கும் ஒரே இன‌ம், இந்த‌ த‌மிழ‌ன‌மாக‌ ம‌ட்டுமே இருக்கும். மும்பை த‌லைமை த‌பால் நிலைய‌த்தில், எழுத்த‌றிவில்லாத‌வ‌ர்க‌ளுக்கு, க‌டித‌ம் எழுதி கொடுக்கும் ந‌ப‌ர், க‌டைசியாக‌ க‌டித‌ம் எழுதிய‌து 4 ஆண்டுக‌ளுக்கு முன்பாக‌ என்று ப‌டித்தேன். ஆனால், இன்ற‌ள‌வும், த‌மிழ் ம‌க்க‌ளின் வாழ்க்கைப் பிர‌ச்சினைக்கு க‌டித‌ம் எழுதி, க‌டித‌ம் எழுதும் ப‌ழ‌க்க‌த்தை உயிர்ப்புட‌ன் வைத்து இருக்கும், முத்த‌மிழ‌றிஞ‌ர், த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளை பாராட்டுகிறேன்.

No comments: