Monday, June 29, 2009

த‌வ‌றாக‌ புரிந்து கொள்ள‌ப்ப‌ட்ட‌ ப‌ழ‌மொழிக‌ள்

காரைக்குடியில் உள்ள‌ மைய‌ மின்வேதிய‌ல் ஆய்வ‌க‌த்தில் முனைவ‌ர் ப‌ட்ட‌த்திற்கான‌ ஆராய்சியில் ஈடுப‌ட்ட‌ ந‌ண்ப‌னொருவ‌ன், I. I. T -Bombay யில் வாய்ப்பு கிடைத்த‌‌வுட‌ன் இங்கே தாவினான். துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மாக‌, அவ‌னுடைய‌ நெறியாள‌ருட‌ன் ஏற்ப‌ட்ட‌ க‌ருத்து வேறுபாட்டால், I. I. T -Bombay யில் இருந்து நீக்கப்ப‌ட்டான். இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் நட‌ந்த‌ பொழுது, ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ ப‌ழ‌மொழிக‌ள் ப‌ற்றிய‌தே இப்ப‌திவு. ஒருவ‌ன் சொன்னான், "அர‌ச‌னை ந‌ம்பி புருச‌னை கைவிட்ட‌துக்கான‌" ப‌ல‌னை அனுப‌விக்கிறான். விநாய‌க‌ர் சிலைக‌ள் அர‌ச‌ ம‌ர‌த்த‌டியில் பிர‌திஷ்டை செய்ய‌ப்ப‌ட்டு இருக்கும். குழ‌ந்தை பாக்கிய‌ம் இல்லாத‌ பெண்க‌ள் விநாய‌க‌ரை சுற்றுவ‌தாக‌ நினைத்து அர‌ச‌ ம‌ர‌த்தை சுற்றினால், அம்ம‌ர‌த்தில் இருந்து வ‌ர‌க்கூடிய‌ மூலிகை காற்று க‌ர்ப்ப‌ப்பையில் உள்ள‌ குறைக‌ளை நீக்கும். அத‌னால் குழ‌ந்தை பிற‌க்கும் வாய்ப்பு உண்டாகும் என்ப‌து ந‌ம்பிக்கை. அதே ச‌ம‌ய‌ம், குழ‌ந்தை பெற்றுக் கொள்ள‌ அர‌சினை (அர‌ச‌ ம‌ர‌ம்) ந‌ம்பினால் போதும், புருச‌னுட‌ன் கூட‌ வேண்டிய‌தில்லை என்று நினைப்ப‌து த‌வ‌று என்ப‌தே இப்ப‌ழ‌மொழியின் பொருள். "அர‌சினை ந‌ம்பி புருச‌னை கைவிட்ட‌து போல‌"‌ என்ப‌தே ச‌ரி. இன்னொரு ந‌ண்ப‌ன் சொன்னான், இந்த‌ நெறியாள‌ரை ந‌ம்பி ஆராய்சியில் ஈடுப‌டுவ‌து, "ம‌ண்குதிரையை ந‌ம்பி ஆத்துல‌ இற‌ங்குற‌‌துக்குச் ச‌ம‌ம்". ம‌ண்குதிரை என்ப‌து ஒரு அசையாப்பொருள் அதை ந‌ம்பி த‌ரையிலேயே ப‌ய‌ணிக்க‌ முடியாத‌ போது, எப்ப‌டி ஆற்றில் இற‌ங்க‌ முடியும்? ஆற்றில் நீர் ஓடும் போது, ம‌ண‌ல் அடித்துச் செல்ல‌ப்ப‌ட்டு, ம‌ண‌ல் குன்றுக‌ள் உண்டாகும். இத‌ற்குப் பெய‌ர் "ம‌ண் குதிர்". முழுவ‌துமாக‌ ஆற்றை நீந்தி க‌ட‌க்கும் ஆற்ற‌ல் இல்லாத‌வ‌ர்க‌ள், சிறிது தூர‌ம் நீந்தி, பின்ன‌ர் ம‌ண் குதிரில் நின்று விட்டு மீண்டும் நீந்த‌லாம் என‌ திட்ட‌மிட‌க்கூடும். ம‌ண் குதிரில் யாராவ‌து ஏறினால், அது உட‌னே ச‌ரிந்து அதில் ஏறிய‌வ‌ர் நீரில் அடித்துச் செல்ல‌ப்ப‌டுவ‌ர். என‌வே "ம‌ண் குதிரை ந‌ம்பி ஆற்றில் இற‌ங்க‌க் கூடாது" என்ற‌ன‌ர் ந‌ம் முன்னோர்.

Sunday, June 28, 2009

இல‌ங்கையில் ராணுவ‌ புர‌ட்சி சாத்திய‌மா?

ஆங்கிலேய‌ர்க‌ளிட‌ம் இருந்து சுத‌ந்திர‌ம் பெற்று ஜ‌னநாயக நாடாக‌ இருந்த‌ ப‌ர்மா, 1962‌ல் ராணுவ‌ ஆட்சியின் கீழ் வ‌ந்த‌து. "வ‌ன்முறையின் தோல்வி" ப‌ற்றி அறிந்த‌ ஆங் சான் சுக்யி, அஹிம்சை வ‌ழியில் ஏற‌த்தாழ‌ 20 ஆண்டு கால‌ம் போராடிக் கொண்டு இருக்கிறார். ப‌ல‌ன் தான் கிடைத்த‌பாடில்லை, கிடைப்ப‌த‌ற்கான‌ வாய்ப்புக‌ளும் தெரிய‌வில்லை. துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மாக‌, போராடி கொண்டிருக்கிறார் என்ப‌தை விட‌, ஒரு வீட்டில் அம‌ர்ந்திருக்கிறார் என்ப‌தே ச‌ரி! இவ‌ருடைய‌ க‌ட்சி பெற்ற‌ மாபெரும் தேர்த‌ல் வெற்றியை அங்கீக‌ரிக்க‌ ம‌றுத்த‌ ராணுவ‌ ஆட்சியாள‌ர்க‌ள், இன்ற‌ள‌வும் ப‌ர்மாவை ஆட்டிப்ப‌டைத்து கொண்டிருக்கிறார்க‌ள். பாகிஸ்தானிலும் ப‌ல‌ முறை ம‌க்க‌ளால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ங்க‌ள், ராணுவ‌ அதிகாரிக‌ளால் தூக்கியெறிய‌ப் ப‌ட்ட‌தை நாம் அறிவோம். வ‌ங்காள‌தேச‌த்தில் ப‌ல‌ முறை ராணுவ‌ புர‌ட்சி ஏற்ப‌ட்ட‌து, அத்த‌கைய‌ ஒரு ராணுவ‌ புர‌ட்சியில் அந்நாட்டு அதிப‌ர் முஜிபூர் ர‌ஹ்மான் கொலை செய்ய‌ப்ப‌ட்ட‌து வ‌ர‌லாறு. நேபாள‌த்தில், ம‌ன்ன‌ரே ஆட்சி அதிகார‌ங்க‌ளை நேபாள‌ ராணுவ‌த்திட‌ம் அளித்த‌ கோமாளித்த‌ன‌மும் ந‌ட‌ந்த‌து. இப்ப‌டி, இந்தியாவை சுற்றியுள்ள‌ நாடுக‌ளில் ராணுவ‌ புர‌ட்சி ந‌ட‌ந்துள்ள‌ போதும், இல‌ங்கையில் அத்தகைய‌ ராணுவ‌ புர‌ட்சி இன்று வ‌ரை ஏற்ப‌ட‌வில்லை. ஆனால் சிங்க‌ள‌வ‌ர்க‌ளிட‌ம், அந்நாட்டு அதிப‌ர் அள‌விற்கே பிர‌ப‌ல‌ம் அடைந்துள்ள‌ ச‌ர‌த் பொன்சேகாவிற்கு அந்நாட்டு அதிப‌ர் ஆகும் அவா இருக்கிற‌தோ என்ற‌ எண்ண‌ம் என‌க்கு ஏற்ப‌டுவ‌தை த‌விர்க்க‌ இய‌ல‌வில்லை. ஏனென்றால், எந்த‌ ராணுவ‌ த‌ள‌ப‌தியும் பேச‌ முய‌லாத‌ விட‌ய‌ங்க‌ளை பேசுவ‌தை வ‌ழ‌க்க‌மாக‌ கொண்டிருக்கிறார் இந்த‌ த‌ள‌ப‌தி. உதார‌ணமாக‌, த‌மிழ் ம‌க்க‌ளுடைய‌ பாதுகாப்பை நான் உறுதி செய்வேன் என்று பெய‌ர‌ள‌விற்கேனும் ராஜ‌ப‌க்சே பேசி வ‌ருகையில், த‌மிழ‌ர்க‌ள் சிறுபான்மையின‌ர், அவ‌ர்க‌ளுக்கு எவ்‌வித‌ ச‌லுகைக‌ளும் வ‌ழ‌ங்க‌ வேண்டிய‌தில்லை என்ற‌ பொன்சேகாவின் கூற்று க‌வ‌னிக்க‌த்த‌க்க‌து. இத்தகைய‌ கூற்றுக‌ள் சிங்க‌ள‌ பேரின‌வாதிக‌ளிட‌ம் த‌ன் செல்வாக்கை அதிக‌ரிக்க‌ உத‌வும் என்ப‌து த‌விர‌ வேறு கார‌ண‌ம் என்ன‌ இருக்க‌ முடியும்? அதே போல‌, த‌ன‌க்கு பிடிக்காத‌ ராணுவ‌ அதிகாரிக‌ளை ஓதுக்கி த‌ள்ளி, த‌ன‌க்கு அனுகூல‌மான‌ அதிகாரிக‌ளை ப‌த‌வியில் நீடிக்க‌ச் செய்வ‌த‌ன் மூல‌ம், ராணுவ‌த்தில் த‌ன்னுடைய‌ செல்வாக்கை நிலை நிருத்தி, த‌ன் எதிர்கால‌ திட்ட‌ங்க‌ளுக்கு இல‌ங்கை ராணுவ‌த்தை த‌யார் செய்து வ‌ருகிறாரா, பொன்சேகா? போர் முடிந்த‌ பிற‌கும், இன்னும் 1 ல‌ட்ச‌ம் ராணுவ‌ வீர‌ர்க‌ளை ப‌டையில் சேர்க்க‌ வேண்டிய‌ அவசிய‌ம் என்ன‌? இல‌ங்கையில் ராணுவ‌ புர‌ட்சி ஏற்ப‌டுமானால், ராஜ‌ப‌க்சே ச‌கோத‌ர‌ர்க‌ள் நிலை என்ன‌? அப்ப‌டி ஒருவேளை ராணுவ‌ புர‌ட்சியில் பொன்சேகா ஈடுப‌டுவார் என ராஜ‌ப‌க்சே ச‌கோத‌ர‌ர்க‌ள் நினைத்தால், பொன்சேகாவின் க‌தி என்ன‌?

Sunday, June 21, 2009

பா. ஜ‌. க‌ வும் விடுத‌லைப் புலிக‌ளும்

இந்திய‌ அர‌சின் கூடுத‌ல் செய‌லாள‌ராக‌ இருந்த‌, விடுத‌லைப் புலிக‌ளின் எதிர்ப்பாள‌ர் பி. இராம‌ன், ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் ம‌ற்றும் பிர‌பாக‌ர‌ன் ப‌ற்றி இப்ப‌டி எழுதினார் "In my younger days, the Jaffna Tamils had a reputation for being meek and mild. We used to make fun of them by saying that if a policeman or a soldier pointed a gun at them they would tie their lungi above the knees and run. It is remarkable how Prabakaran made them shed their meek demeanour and stand up and fight for their rights. They fought ferociously because they felt degraded and humiliated by the Sinhalese majority after the British left Ceylon in 1948"
1980ல் தொட‌ங்க‌ப்ப‌ட்டு, 1984ல் இரு நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளை கொண்டிருந்த‌ பார‌திய‌ ஜ‌ன‌தா க‌ட்சியை (பா. ஜ‌. க‌), 14 ஆண்டுக‌ளில் அர‌ச‌மைக்கும் ச‌க்தியாக‌ மாற்றிய‌ வாஜ்பாயி ம‌ற்றும் அத்வானியின் திற‌மை விய‌க்க‌த்த‌க்க‌தே. இந்திய‌ விடுத‌லைக்கு முன்பே தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌ க‌ம்யுனிஸ்ட் க‌ட்சியும், விடுத‌லைக்குப் பின்னால் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌ ப‌ல்வேறு க‌ட்சிக‌ளும் சில‌ மாநில‌ங்க‌ளில் செய‌ல்ப‌டும் க‌ட்சிக‌ளாக‌ சுருங்கிப் போன‌து, நாம் அறிந்த‌தே. மொழியால், ம‌த‌த்தால், க‌லாச்சார‌த்தால், ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்கங்க‌ளால் வேறுப‌ட்டு‌ ப‌ர‌ந்து விரிந்த‌ பார‌த‌ தேச‌த்தில்‌, ஒரு இய‌க்க‌த்தை மிக‌க்குறுகிய‌ கால‌த்தில் ஆட்சி செய்ய‌த் த‌குதியான‌‌ க‌ட்சியாக‌ வார்த்த‌‌து, ஒரு சாத‌னையே. 2009, மே மாத‌த்தின் ம‌த்திய ப‌குதியில் பா. ஜ‌. க‌ வும், விடுத‌லைப் புலிக‌ளும் மிக‌ப்பெரிய‌ பின்ன‌டைவை ச‌ந்தித்த‌ன‌ர். எதிர்கால‌த்தை திட்ட‌மிட‌, சுய‌ப‌ரிசோத‌னை அவ‌சிய‌ம், ஆனால் இவ்விரு இய‌க்க‌ங்க‌ளும் செய்யும் சுய‌ப‌ரிசோத‌னை, பிரச்சினைக‌ளை எதிர்கொள்கிற‌ வித‌ம்,‌ அதில் இவ‌ர்க‌ளுக்குள்ள‌ ஒற்றுமை, என‌க்கு ஆச்ச‌ரிய‌த்தையும் அதிர்ச்சியையும் த‌ருகிற‌து. "த‌டி எடுத்த‌வ‌ன் எல்லாம் த‌ண்ட‌ல்கார‌ன்" என்று ஒரு வாச‌க‌ம் உண்டு, அது போல‌, தோல்விக்கான‌ கார‌ண‌ங்க‌ளை இவ்விரு இய‌க்க‌ங்க‌ளின் உருப்பின‌ர்க‌ள், திடீர் நிபுண‌ர்க‌ளாகி ஊட‌க‌ங்க‌ளில் அல‌சோ அல‌சு என்று அல‌சித்த‌ள்ளுகிறார்க‌ள். Defeat should never be a source of discouragement but rather a fresh stimulus என்று யாரேனும் இவ‌ர்க‌ளுக்கு எடுத்துச் சொல்லுங்க‌ள்.

முத‌லாவ‌தாக‌ பா. ஜ‌. க‌:

தேர்த‌ல் அர‌சிய‌லில் வெற்றியும், தோல்வியும் த‌விர்க்க‌ முடியாத‌து. கான‌க‌த்தில் இருந்த‌ புத்த‌ ம‌கானிட‌ம் சென்ற‌ ஒரு தாய், பாம்பு தீண்டி ம‌ர‌ணித்த‌ த‌ன் ம‌க‌னை உயிர்ப்பிக்கும் ப‌டி வேண்டினாள். ம‌ர‌ண‌ம் ச‌ம்ப‌விக்காத‌ வீட்டில் இருந்து கால் ப‌டி க‌டுகு வாங்கி வா தாயே, உன் ம‌க‌னை உயிர்ப்பித்து த‌ருகிறேன் என்றார் ம‌கான். வெருங்கை‌யோடு திரும்பி வ‌ந்த‌ தாயிட‌ம், பிற‌ந்த‌ அனைவ‌ரும் இற‌ப்ப‌து உல‌க‌ நிய‌தி என்ப‌தை எடுத்துச் சொன்னார் புத்த‌பிரான். பா. ஜ‌. க‌ வின‌ரே, தோல்வியே காணாத‌ அர‌சிய‌ல் க‌ட்சியொன்றின் த‌லைவ‌ரிட‌ம் ஒரு குவ‌ளை தேநீர் வாங்கி ப‌ருகிவிட்டு, yazhumvaazhum@gmail.com என்ற‌ முக‌வ‌ரிக்கு மின்ன‌ஞ்ச‌ல் அனுப்பினால், அடுத்த‌ நாளே பா. ஜ‌. க ம‌த்தியில் அர‌சாள‌ ஏற்பாடு செய்கிறேன்!? பா. ஜ‌. க‌ தொண்ட‌ர்க‌ளே, ப‌த்து ஆண்டுக‌ளுக்கு முன்னாள் விந்திய‌ ம‌லைக்கு வ‌ட‌க்கே ம‌ட்டும் இருந்த‌ க‌ட்சியை, இன்று பார‌த‌த்தின் அனைத்து மாநில‌ங்க‌ளிலும் கிளை ப‌ர‌ப்பி நிற்கும் க‌ட்சியாக‌ மாற்றிய‌ உங்க‌ள் க‌ட்சித் த‌லைவ‌ர்க‌ளை ந‌ம்புங்க‌ள். 1999ல், 112 இட‌ங்க‌‌ளை ம‌ட்டுமே வென்ற‌ காங்கிர‌ஸ் க‌ட்சித் த‌லைமையின் மீது ந‌ம்பிக்கை வைத்த‌ இர‌ண்டாம் க‌ட்ட‌ த‌லைவ‌ர்கள் ம‌ற்றும் அத‌ன் தொண்ட‌ர்க‌ளால், இன்றைக்கு ஆளும் க‌ட்சியாக‌ இருக்கும் காங்கிர‌ஸ் க‌ட்சியிட‌ம் பாட‌ம் ப‌டியுங்க‌ள்‌! பா. ஜ‌. க‌ வின் த‌லைவ‌ர்க‌ளே, ஊட‌க‌த் துறையில் உங்க‌ள் ந‌ட்பு வ‌ட்ட‌த்தை விரிவாக்குங்க‌ள். ஊட‌க‌த் துறையின‌ர் உங்க‌ள் விருப்ப‌த்திற்கேற்ப‌ செய‌ல்ப‌ட‌, என்ன‌ செய்ய‌ வேண்டும் என்ப‌தை, சென்னையில் இல‌ங்கைக்கான‌ துணை தூத‌ராக‌ ப‌ணியாற்றிய‌ அம்சாவிட‌ம் கேளுங்க‌ள்! வ‌ங்கியில் இருக்கும் க‌ருப்பு ப‌ண‌த்தை இந்தியாவிற்கு கொண்டு வ‌ருவேன் என்ற‌ அத்வானியின் பேச்சைவிட‌, மின்வெட்டு இல்லாத‌ மாநில‌ம், தொழில் துறை‌ வ‌ள‌ர்ச்சி, உட‌ல் ந‌ல‌ன் பேண‌லுக்கான‌ திட்ட‌ங்க‌ள், ம‌க‌ப்பேறு ம‌ருத்துவ‌த்திற்கான‌ அறிய‌ திட்ட‌ங்க‌ள் ப‌ற்றிய‌ மோடியின் பேச்சை விட‌, வ‌ருண் காந்தியின் முஸ்லிம் விரோத‌ பேச்சிற்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுத்த‌ ஊட‌க‌ங்க‌ளுக்கு, உங்கள் தோல்வியில் முக்கிய‌ ப‌ங்கு உண்டு. நீங்க‌ள் சொல்ல‌ விரும்பும் செய்தியை, ம‌க்க‌ளுக்கு கொண்டு செல்ல‌ ஊட‌க‌த்துறையில் உங்க‌ளுக்கு ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌சிய‌ம்.

இர‌ண்டாவ‌தாக‌ விடுத‌லைப் புலிக‌ள்:

முப்ப‌து ஆண்டு கால‌ அஹிம்சை போராட்ட‌த்தின் தோல்விக்குப் பின், சிறு ஆயுத‌க்குழுவாக‌ ப‌த்தோடு ப‌தினொன்றாக‌ தொட‌ங்கி, ஒரு தேச‌த்தின் 17000 ச‌துர‌ கிலோமீட்ட‌ர் ப‌ர‌ப்பை பிடித்து ஒரு இணை அர‌சாங்க‌த்தை ந‌ட‌த்திய‌, உங்க‌ளுடைய‌ த‌ற்போதைய‌ செய‌ல்பாடுக‌ள் ஒருவித‌ ஆற்றாமையை ஏற்ப‌டுத்துவ‌தை தவிர்க்க‌ முடிய‌வில்லை. புலிக‌ள் முன்னெடுத்த‌ ஈழ‌ விடுத‌லை போருக்கும், பால‌ஸ்தீன‌ விடுத‌லை இய‌க்க‌ம் முன்னெடுத்த‌ பால‌ஸ்தீன‌ விடுத‌லை போருக்கும் ப‌ல‌ ஒற்றுமைகள் உண்டு. உங்க‌ளைப் போல‌வே, பால‌ஸ்த்தீன‌ விடுத‌லை இய‌க்க‌மும் ப‌ல‌ தாக்குத‌ல்க‌ளை இஸ்ரேலில் ந‌ட‌த்திய‌ போதும், அத‌ன் த‌லைவ‌ரான‌ யாச‌ர் அராப‌த்துக்கு உல‌க‌ அள‌வில் ஒரு அறிமுக‌மும், ம‌திப்பும் இருந்த‌து உண்மை. துர‌திர்ஷ்ட‌ வ‌ச‌மாக‌, ச‌ர்வ‌தேச‌ காவ‌ல் துறையின் தேட‌ப்ப‌டுவோர் ப‌ட்டிய‌லில் இருந்த‌ பிர‌பாக‌ர‌னால், யாச‌ர் அராப‌த்தின் நிலையை அடைய‌ முடியாத‌தில் ஆச்ச‌ரிய‌ம் ஒன்றும் இல்லை. ஆனால், பிரபாக‌ர‌ன் இருக்கிறாரா இல்லையா என்ப‌து தெரியாத‌ இன்றைய‌ நிலையிலும், பிர‌பாக‌ர‌ன் ப‌ற்றியே பேசிக் கொண்டு இருப்ப‌து அறிவுட‌மை அல்ல‌. எங்கிருக்கிறார், எப்ப‌டி இருப்பார் என்ப‌தே தெரியாத ப‌த்ம‌னாத‌ன் சொல்லை ந‌ம்பி அவ‌ர் பின்னால் அணிவ‌குப்போம் என்ற‌ உங்க‌ள் அறிக்கைப் ப‌டி செய‌ல்ப‌டுவ‌து மீண்டும் ஒரு வீழ்ச்சியின் தொட‌க்க‌மாக‌வே இருக்கும். இன்றைய‌ சூழ‌லில், வெளிப்ப‌டையாக‌ செய‌ல்ப‌ட‌க் கூடிய‌ உல‌கின் ப‌ல்வேறு தேச‌ங்க‌ளிலும் அறிய‌ப்ப‌ட்ட‌ த‌லைமையை தேர்ந்தெடுங்க‌ள். த‌லைம‌றைவாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் த‌லைம‌றைவாக‌வே இருங்க‌ள், அறிக்கை விடுவ‌தை நிறுத்துங்க‌ள். இவை அனைத்தையும் விட‌, என் தேச‌த்திட‌ம் கையேந்துவ‌தை நிறுத்துங்க‌ள். என்றைக்கு, ஆயிர‌க்க‌ண‌க்கில் ம‌னித‌ர்கள் ம‌ர‌ணித்த‌தைப் பார்த்த‌ பின்னும், அது ப‌ற்றிய‌ உண‌ர்ச்சியே இன்றி வாக்க‌ளித்தோமோ, அன்றே நாங்க‌ளும் மாண்டுவிட்டோம் என்ப‌தே உண்மை.

இப்ப‌திவுட‌ன் தொட‌ர்புடைய‌ என்னுடைய ம‌ற்றொரு ப‌திவை இந்த‌ சுட்டியில் ப‌டிக்க‌ வேண்டுகிறேன்
http://yaazhumvaazhum.blogspot.com/2009/06/blog-post_08.html

Saturday, June 20, 2009

த‌ய‌வு செய்து மூட‌ வேண்டும், வாயை!

த‌மிழ‌ர‌ங்க‌த்தில், பி. இராயாக‌ர‌னின் க‌ட்டுரைக‌ளை ப‌டித்த‌ போது, ஆம்புரோஸ் பியெர்ஷின் "God knows the future, but a historian can alter the past‌ " என்ற‌ வாச‌க‌ம் தான் நினைவுக்கு வ‌ருகிற‌து. வ‌ர‌லாற்றை திரித்து, இன்று அவ‌ர் எழுதியுள்ள க‌ட்டுரை அப‌த்த‌ங்க‌ளின் உச்ச‌ம். அக்க‌ட்டுரையின் நோக்க‌ம், விடுத‌லைபுலிக‌ள் த‌மிழ‌ருக்கும் சிங்க‌ள‌ருக்கும் எதிரான‌வ‌ர்க‌ள் என்று நிருவுவ‌து. அத‌ற்கு, ஒரு சில‌ வ‌லுவில்லா ஆதார‌ங்க‌ளையும், த‌ன்னுடைய‌ க‌ணிணியையும் ப‌ய‌ன்ப‌டுத்தி இருக்கிறார்! விடுத‌லைபுலிக‌ளின் ஆயுத‌ போர‌ட்ட‌த்தை, ஈழ‌ விடுத‌லையின் தொட‌க்க‌மாக‌ ப‌ல‌ வ‌ட‌ இந்திய‌ ஊட‌க‌ங்க‌‌ள் நிருவி இருக்கின்ற‌ன‌. அதே வேளையை, த‌மிழில் பி. இராயாக‌ர‌ன் செய்ய‌ முய‌ன்றிருக்கிறார். புலிக‌ள், பாதிக்க‌ப்ப‌ட்ட‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்காக‌வும் போராடி இருக்க‌வேண்டும் என்று, ஐரோப்பாவில் முட்டைக்கு முக‌ச்சவ‌ர‌ம் செய்து கொண்டு இருக்கும் இராயாக‌ர‌ன் அள்ளி விட்டிருக்கிறார். த‌ன்னை ஒரு போராளியாக‌ காட்டிகொள்ளும் இந்த‌ இராயாக‌ர‌ன், சிங்க‌ள‌ அர‌சினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்காக‌ என்ன‌ செய்தார்? இவ‌ர் த‌மிழ‌ர்க‌ளுக்கு என்ன‌ செய்தார் என்ப‌தை யாரேனும் சொல்லுங்க‌ளேன்! புலிக‌ளுக்கு, த‌மிழ‌ரும், சிங்க‌ள‌ரும் ஆத‌ர‌வ‌ளிக்க‌வில்லை என‌ பினாத்துகிற‌ இவ‌ருக்கு எவ‌ரும் ஆத‌ர‌வ‌ளிப்பது போல் தெரிய‌வில்லை. சில‌ வார‌ங்க‌ளுக்கு முன்னால், "வாய்ப்பு கிடைக்குமானால் ஈழ‌ம் சென்று போராட‌த் த‌யார்" என்றார் இராயாக‌ர‌ன். இந்திய‌ சுத‌ந்திர‌த்திற்கு போராட‌ ம‌காத்மா காந்திக்கோ, க‌ருப்பின‌ விடுத‌லைக்கு போராட‌ ம‌ண்டேலாவிற்கோ, ப‌ர்மிய‌ ம‌க்க‌ளின் உரிமைக்கு போராட‌ ஆங்‍‍-சான் சுகிக்கோ, திபெத்திய‌ ம‌க்க‌ளின் ந‌ல‌ன் பேன‌ த‌லாய் லாமாவிற்கோ, ஈழ‌ ம‌க்க‌ளின் பிற‌ப்புரிமைக்கு போராட‌ த‌ந்தை செல்வாவிற்கோ வாய்ப்புக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வில்லை, அவ‌ர்க‌ளே உருவாக்கி கொண்ட‌ன‌ர். வ‌ராலாறு இப்ப‌டி இருக்க‌, க‌தாநாயாக‌னாக‌ ந‌டிக்க‌ வாய்ப்பு கிடைத்தால் ந‌டிப்பேன் எனும் ந‌கைச்சுவை ந‌டிக‌ர் போல், வாய்ப்பு கிடைத்தால் போராடுவேன் என்று அரற்றும்,‌ போராளி இராயாக‌ர‌ன், த‌ய‌வு செய்து மூட‌ வேண்டும், வாயை! க‌டைசியாக‌ ஒன்று, தொப்பி போட்ட‌வ‌னெல்லாம் கேப்ட‌ன் அல்ல என்றார் திருமாவ‌ள‌வ‌ன், அது போல் பாசிச‌ம், போராட்ட‌ம் என்று எழுதுவ‌தால் நீங்க‌ள் போராளி அல்ல‌!

Friday, June 19, 2009

18 ஆண்க‌ளும் 18 பெண்க‌ளும்!

அருப்புக்கோட்டை க‌ல்லூரியில், இள‌ங்க‌லை அறிவிய‌ல் வ‌குப்பில் 18 ஆண்க‌ளும் 18 பெண்க‌ளும், ப‌டித்தோம் என்ப‌தை விட‌ இருந்தோம் என்ப‌தே ச‌ரி. க‌ல்லூரிக்குச் செல்வ‌தே வாழ்வின் சாத‌னையாக‌ க‌ருதிய‌ நாங்க‌ளும், ப‌டிப்பின் அவ‌சிய‌ம் அறிந்த‌ பெண்க‌ளும் என‌ அது ஒரு பொருந்தா கூட்ட‌ணி. அன்றைய‌ சூழ‌லில், பெண்க‌ளை ப‌க‌டி செய்வ‌தை, த‌ம‌து பிற‌ப்புரிமையாக‌ க‌ருதிய‌ மாண‌வ‌ர்க‌ளால் துன்ப‌மோ அல்ல‌து இன்ப‌மோ(!) அடைந்த‌ அந்த‌ 18 பெண்க‌ள், வ‌குப்பிற்கு வ‌ருதே அழ‌கு. ந‌ம்‌ ம‌க்க‌ளின் மேற்க‌த்திய‌ மோக‌த்தால் அழித்தொழிக்க‌ப்ப‌ட்ட‌, தாவ‌ணி, த‌லையில் பூவுட‌ன், புத்த‌க‌ங்க‌ளை த‌ம் மார்போடு அணைத்து அவ‌ர்க‌ள் வ‌குப்பில் நுழையும் போது ஏற்ப‌டும் உண‌ர்வை, ந‌யாக‌ரா நீர்வீழ்ச்சியில் Maid of the Mist டில் பெற‌லாம். புத்த‌க‌ங்க‌ள் இப்பெண்க‌ளின் ம‌ன‌திற்கு அருகேயும், அதே புத்த‌க‌ங்க‌ள் எங்க‌ள் கைக‌ளில், ம‌ன‌தில் இருந்து தொலைவிலும் இருந்த‌து, எங்க‌ள் க‌ல்வித் த‌ர‌த்திற்கான‌ குறியீடே. பெண்க‌ளை மிர‌ள‌ச் செய்து சுக‌ம் காணும் ந‌ண்ப‌னொருவ‌ன், முருங்கை காயை பெண்க‌ள் அம‌ரும் இட‌த்தின் மேலே ஒழித்து வைத்து, அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் இருக்கையில் அம‌ர்ந்த‌ உட‌ன், வ‌குப்பின் மேற்க்கூரையை உலுக்கி, முருங்கை காயை கீழே விழ‌ச் செய்தான் (சாமி ச‌த்திய‌மா அந்த‌ காரிய‌த்தை நாஞ் செய்ய‌லை). 18 பூக்க‌ளும், புயலாகி க‌ல்லூரி முத‌ல்வ‌ர் அறையில் க‌ரை க‌ட‌ந்த‌தை, ஒரு வார‌ கால‌ம் நாங்க‌ள் வ‌குப்ப‌றையில் இருந்து இடைநீக்க‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌போது அறிந்து கொண்டோம். அதை தொட‌ர்ந்து, ந‌ட‌ந்த‌ விசார‌னையில் "ஒரு க‌ல்லூரியின் க‌ழிப்ப‌றை அக்க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளின் த‌ர‌த்தை பிர‌திப‌ளிக்கும். உங்க‌ள் வ‌குப்ப‌றை ம‌ற்ற‌ க‌ல்லூரிக‌ளின் க‌ழிப்ப‌றையை விட‌ கேவ‌ல‌ம்" என்றார், முத‌ல்வ‌ர். ச‌மீப‌த்தில், டெல்லியில் இருந்து சென்னை சென்ற‌ ஏர் இந்தியா விமான‌ க‌ழிப்ப‌றையில் ந‌டிகை குஷ்பு ப‌ற்றி எழுத‌ப்ப‌ட்டு இருந்த‌ வாச‌க‌ம், அவ்விமான‌ ப‌ய‌ணிக‌ளின் த‌ர‌த்திற்கான‌ குறியீடா என்ப‌தை ஆராய்வ‌து இப்ப‌திவின் நோக்க‌ம் அல்ல‌! க‌ல்லூரியின் மூன்றாம் ஆண்டு தேர்வு நேர‌ம், என்னுடைய‌ இய‌ற்வேதிய‌ல் புத்த‌க‌த்தை காண‌வில்லை. அப்புத்த‌க‌த்தை தேடி சில‌ பெண்க‌ளின் வீட்டுக்கு சென்ற‌ போது, எங்க‌ள‌து "முருங்கை காய்" க்கான‌ எதிர்வினை கிடைத்த‌து. ஆனால், உமா ம‌கேஸ்வ‌ரி என்ற‌ பெண் எங்க‌ளை அன்போடு வ‌ர‌வேற்ற‌துட‌ன், என்னுடைய‌ புத்த‌க‌ம் யாரிட‌ம் இருக்கிற‌து என்ப‌தையும் சொன்னார். அன்று உமா கொடுத்த‌ "ர‌ஸ்னா", அட்லாண்டா கோக் த‌லைமைய‌க‌த்தில் நான் ந‌க்கிய‌ (50 வ‌கை கோக் இருந்துச்சு, அதுனால‌ குடிக்காம‌, கொஞ்ச‌மா...) குளிர்பான‌ங்க‌ளை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு உய‌ந்த‌து என்ப‌தை எங்கூரு முனிய‌ப்ப‌சாமி கோயில்ல‌ ச‌த்திய‌ம் ப‌ண்ணி சொல்ல‌ளாம். 18 ஆண்க‌ளால், மிக‌ க‌டுமையாக‌ ப‌க‌டி செய்ய‌ப்ப‌ட்ட‌, அத‌னால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ உமாவின் விருந்தோம்ப‌லை, நினைக்கும் போது ஜெரோம் க‌ம்மிங்ஸின் "A friend is one who knows us, but loves us anyway" என்ற‌ வாச‌க‌ம் தான் நினைவுக்கு வ‌ருகிற‌து. இன்னைக்கு நானெல்ல‌ம் அமெரிக்காவில‌ விஞ்ஞானின்னு சொல்லிக்கிட்டு அலையிர‌துக்கு,‌ அன்னைக்கு நீங்க‌ செஞ்ச‌ உத‌வியும் ஒரு கார‌ண‌ம், ந‌ல்லா இருங்க‌ உமா!

Thursday, June 18, 2009

தீர்மான‌ங்க‌ளுக்கும், அவ‌மான‌ங்க‌ளுக்கும் அவ‌சிய‌மில்லை!

அனைத்துக் க‌ட்சிக‌ளும் ஆத‌ரித்தால் க‌ச்ச‌த்தீவை மீட்க‌ த‌மிழ‌க‌ ச‌ட்ட‌ம‌ன்ற‌த்தில் தீர்மான‌ம் நிறைவேற்ற‌த் த‌யார், என‌ த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் அறிவித்துள்ளார். இல‌ங்கையில் போரை நிறுத்த‌ வேண்டி, அனைத்து க‌ட்சிக‌ளும் ஆத‌ரித்த‌ தீர்மான‌ம் நிறைவேற்ற‌ப் ப‌ட்ட‌து. அந்த‌ தீர்மான‌த்திற்கு கிடைத்த‌ ம‌ரியாதை என்ன‌ என்ப‌தை த‌மிழின‌ம் அறியும். அத‌ற்குப் பின்னால், தி. மு. க‌ வும் அத‌ன் தோழ‌மை க‌ட்சிக‌ளும் இறுதி வேண்டுகோள் விடுத்து நிறைவேற்றிய‌ தீர்மான‌மும் ம‌த்திய‌ அர‌சினால் குப்பைக் கூடைக்கு அனுப்ப‌ப் ப‌ட்ட‌து, நாம் அறிந்த‌தே! த‌மிழ‌ர் ந‌ல‌ன் சார்ந்த‌ பிர‌ச்சினைக‌ளில், ஒரு க‌ட்சி தீர்மான‌மோ, அனைத்துக் க‌ட்சி தீர்மான‌மோ எந்த‌ ப‌ல‌னும் த‌ர‌ப்போவ‌தில்லை என்ப‌து தெரிந்தும் எத‌ற்குத் தீர்மான‌மும், அதை அடுத்த‌ அவ‌மான‌மும்? ஆனால், எதிர்கால‌த்தில் கூட்ட‌ணி மாறும் போது, "த‌மிழ‌ர்க‌ளின் வாழ்வாதார‌ பிர‌ச்சினை ஆன க‌ச்ச‌த்தீவை மீட்க‌ வேண்டி க‌ழ‌க‌ அர‌சு நிறைவேற்றிய‌ தீர்மான‌த்தை ம‌திக்காத‌ காங்கிர‌ஸ் க‌ட்சியுட‌ன் ஒட்டும் இல்லை, உற‌வும் இல்லை" என்று சொல்ல‌ இத்தீர்மான‌ம் உத‌வ‌க்கூடும். ரூபாய் 500 க்கு ஓட்டுப் போட‌ த‌யாராக‌ இருக்கும் ம‌க்க‌ள் இருக்கும் வ‌ரை, தீர்மான‌ங்க‌ளுக்கும், அவ‌மான‌ங்க‌ளுக்கும் அவ‌சிய‌மில்லை என்ப‌தே நித‌ர்ச‌ன‌ம்!
இந்த‌ ப‌திவையும் ப‌டிக்க‌ வேண்டுகிறேன்
http://yaazhumvaazhum.blogspot.com/2009/06/blog-post_2911.html

Tuesday, June 16, 2009

த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளை பாராட்டுகிறேன்

ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் ந‌ரிப்பையூரில், க‌ட‌ல் நீரை குடி நீராக‌ மாற்றும் திட்ட‌ப்ப‌ணிக‌ளை நிறைவேற்றும் ஒப்ப‌ந்த‌க்கார‌ர்க‌ளில் என் ந‌ண்ப‌ரும் ஒருவ‌ர். அத்திட்ட‌ ப‌ணிக‌ளை பார்வையிட‌, என் ந‌ண்ப‌ருட‌ன் சென்ற‌ போது, மீன்பிடி ப‌ட‌கு ஒன்றில் மீன‌வ‌ர் ஒருவ‌ர் சென்ற நிக‌ழ்ச்சி, இன்ற‌ள‌வும் என் நினைவை விட்டு அக‌ல‌வில்லை. கொச்சினில் 4 ம‌ணி நேர‌ம் ப‌ட‌கு ப‌ய‌ண‌ம் சென்ற‌போதோ, மும்பையில் 5 ம‌ணி நேர‌ம் "நில‌வு இர‌வு உண‌வு" என்ற‌ பெய‌ரில் ஒரு ப‌ட‌கில், க‌ட‌லில் விருந்துண்ட‌ போதோ, ந‌யாக‌ராவில், "குதிரை குள‌ம்பு" நீர்வீழ்ச்சியின் ந‌டுவில் ஒரு ப‌ட‌கில் நின்ற‌போதோ ஏற்ப‌டாத‌ உண‌ர்வு, ஒரு தாக்க‌ம், ஒரு பாதிப்பு, ந‌ரிப்பையூரில் ஒரு மீன‌வ‌ன் ப‌ட‌கில் மீன் பிடிக்க‌ சென்ற‌ போது ஏற்ப‌ட்ட‌த‌ற்குக் கார‌ண‌ம், அந்த‌ க‌ட‌ற்க‌ரையில் ஒரு வானொலியில் ஓலித்த‌ க‌விஞ‌ர் வாலியின் "த‌ரை மேல் பிற‌க்க‌ வைத்தான், த‌ண்ணீரில் பிழைக்க‌ வைத்தான்" என்ற‌ பாட‌ல். மீன‌வ‌ர்க‌ளின் துய‌ர‌ங்க‌ளை மிக‌‌ சிற‌ப்பாக‌வும், துல்லிய‌மாக‌வும் எடுத்து சொல்லிய‌ அந்த‌ பாட‌லின் பிண்ண‌னியில், இடுப்பில் குழ‌ந்தையுட‌ன் வ‌ழிய‌னுப்பிய‌ மீன‌வ‌னின் ம‌னைவியும், ஒங்கி எழும் அலைக‌ளும், அஸ்த‌மிக்கும் சூரிய‌னும், உல‌க‌த்தின் தூக்க‌ம் க‌லையாதோ உள்ள‌த்தின் ஏக்க‌ம் தொலையாதோ என்ற‌ பாட‌ல் வ‌ரிக‌ளும், என்னை உலுக்கி விட்ட‌ன‌. இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌து 1998 இல். 11 ஆண்டுக‌ளுக்கு பின்னால் இன்றும், என் மீன‌வ‌ ச‌கோத‌ர‌ர்க‌ளை சிங்க‌ள‌ ஓநாய்க‌ள், க‌டித்து குத‌றுவ‌து ப‌ற்றி எந்த‌ அக்க‌றையும் இன்றி, தொலைக்காட்சியில் ந‌ட‌ன‌ நிக‌ழ்ச்சி க‌ண்ட‌பின், உண்டு உற‌ங்குகிறோம். அன்றே சொன்னார், ந‌ன்றே‌‌ சொன்னார் வாலி "ஒரு நாள் போவார், ஒரு நாள் வ‌ருவார், ஒவ்வொரு நாளும் துய‌ர‌ம், ஒரு சாண் வ‌யிரை வ‌ள‌ர்ப்ப‌வ‌ர் உயிரை, ஊரார் நினைப்ப‌து சுல‌ப‌ம்" த‌ன் ச‌கோத‌ர‌னின் உயிரையே உதிந்த‌ உரோம‌த்துக்கு ச‌ம‌மாக‌ ம‌திக்கும் ஒரே இன‌ம், இந்த‌ த‌மிழ‌ன‌மாக‌ ம‌ட்டுமே இருக்கும். மும்பை த‌லைமை த‌பால் நிலைய‌த்தில், எழுத்த‌றிவில்லாத‌வ‌ர்க‌ளுக்கு, க‌டித‌ம் எழுதி கொடுக்கும் ந‌ப‌ர், க‌டைசியாக‌ க‌டித‌ம் எழுதிய‌து 4 ஆண்டுக‌ளுக்கு முன்பாக‌ என்று ப‌டித்தேன். ஆனால், இன்ற‌ள‌வும், த‌மிழ் ம‌க்க‌ளின் வாழ்க்கைப் பிர‌ச்சினைக்கு க‌டித‌ம் எழுதி, க‌டித‌ம் எழுதும் ப‌ழ‌க்க‌த்தை உயிர்ப்புட‌ன் வைத்து இருக்கும், முத்த‌மிழ‌றிஞ‌ர், த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளை பாராட்டுகிறேன்.

குட‌ல் சுத்தி ஆடுத‌ல்

ந‌ம்ம‌ குண்டாத்துல‌, வ‌ருச‌த்துள‌ ஒரு வார‌ம் த‌ண்ணி ஒடுனா அது ஒரு அதிச‌ய‌ம். ந‌ம்ம‌ சூப்ப‌ர் ஸ்டார் ர‌சினி குடுக்குர‌தா சொன்ன‌ 1 கோடி ரூவா கூட‌ ந‌ம்ம‌ க‌வ‌ர்ம‌ண்டு கொஞ்ச‌‌ம் ப‌ண‌ம் போட்டு, ந‌ம்ம‌ ஊருக‌ல்ல‌ ஒடுர‌ ஆத்தை பூராவும் ந‌ம்ம‌ குண்டாத்தோட‌ இணைக்கிர‌தா திட்ட‌மாம். இந்த‌ ஆத்துக்க‌ரையில‌ இருக்க‌ முனிய‌ப்ப‌சாமி கோவில், மாசிக்க‌ள‌ரி ரொம்ப‌ பேம‌ஸ். ராத்திரி 8 ம‌ணிக்கு, ஒரு கிடாயை பிடிச்சுட்டு வ‌ந்து, அதோட‌ உத்த‌ர‌வை வாங்கி, அதை வெட்டுர‌து ஒரு ச‌ம்பிர‌தாய‌ம். ந‌ம்ம‌ ஆளுக‌, எம்புட்டு பெரிய‌ திருட‌ங்க‌னு, ஆடு கிட்ட‌ உத்த‌ர‌வு வாங்குர‌தை பாத்தா தெரியும். ந‌ல்ல‌ ப‌ச்ச‌த்த‌ண்ணில‌, ம‌ஞ‌ச‌ளை க‌ரைச்சு, அதுல‌ கொஞ்ச‌ம் வேப்பிலை பிச்சு போட்டு ஒரு அண்டாவில‌ வ‌ச்சு இருப்பாங்க‌. இதை தூக்கி இவ‌ங்க‌ ஏற்க‌ன‌வே முடிவு ப‌ண்ணி வ‌ச்சு இருக்க‌ கிடாய் மேல‌ ஊத்துவாங்க‌. பாவ‌ம் அது என்ன‌ செய்யும், த‌ண்ணியை த‌ள்ளி விட‌, த‌லையை ஆட்டுமா இல்லையா, உட‌னே ஒரு பெருசு, ஆடு ஒரு உத்த‌ர‌வு குடுத்துருச்சு. ந‌ம்மூரு வ‌ழ‌க்க‌ப்ப‌டி, 3 உத்த‌ர‌வு வாங்க‌னும்பே. த‌ண்ணியை இன்ன‌ம் ந‌ல்லா ஊத்துங்க‌! இப்ப‌டி மூணு த‌ட‌வை த‌லையை ஆட்டுன‌ உட‌னே, கிடாயோட‌ க‌ழுத்தை அறுத்து, காலை வெட்டி‌, காலை ஆட்டோட‌ வாயில‌ வச்சு, ம‌ண்டையை சாமி சிலை முன்ன‌க்க‌ வ‌ச்சுருவ‌ங்க‌. சாமிக்கு ப‌ட‌ய‌ளாம். இதோட விடாம‌, ஆட்டோட‌ கொட‌லை உருவி அதை த‌ண்ணி வ‌ச்சு அல‌சி, கொட‌லோட‌ ஒரு ப‌க்க‌ம் ஒரு குழாவை சொருகி ஊதுவாங்க‌. இதை சின்ன‌ வ‌ய‌சுல‌ பார்த்த‌ப்ப‌, வெள்ளை க‌ல‌ர், நீள‌ சைக்க‌ள் டீப் மாரி இருந்துச்சு. ராத்திரி, 11 ம‌ணி போல‌, முனிய‌ப்ப‌ சாமி பாரி வேட்டைக்கு கிள‌ம்பும். எங்க‌‌ பெரிய‌ப்பா அந்த‌ கொட‌லை அவ‌ர் உட‌ம்புல‌ சுத்திகிட்டு, ஒரு பெரிய‌ அருவா ஒண்ணையும் தூக்கிகிட்டு, சாமி முன்னாடி ந‌ட‌க்க‌, இவ‌ருக்கு முன்னாடி ஒரு க‌ர‌காட்ட‌ குருப்பு ஒன்னு க‌ர‌க‌மே இல்லாம‌ ஆடிக்கிட்டு போகும். இந்த‌ கர‌காட்ட‌ பொம்ப‌ளைக‌ போட்டு இருக்க‌ உடுப்பு இருக்கே, ஆத்தீ அதை இங்க‌ சொல்ல‌ முடியாது. எங்க‌ பெரிய‌ப்பு வேர‌ ஏய், ஏய்னு க‌த்திகிட்டே வ‌ருவாரு. இவ‌ரு சாமி வ‌ந்து க‌த்துனாரா, இல்லை ஆடுர‌ பொம்ப‌ளைக‌ளை பாத்து க‌த்துனாரான்னு, இன்னைக்கு வ‌ரை தெரிய‌லை. அதை தெரிஞ்சுக்க‌வும் முடியாது. ஒரு 15 வ‌ருச‌த்துக்கு முன்னாடி, ந‌ட்ட‌ ந‌டு ராத்திரில‌, அவுக‌ ஊருக்கு போன‌ ம‌னுச‌ன், த‌ண்ணியில்லாத‌ கிண‌த்துல‌ த‌டுக்கி விழுந்து செத்துப்போனாரு. கிடாய் கொட‌லை சுத்தி ஆடுன‌ ம‌னுச‌னுக்கே இந்த, த‌ன்ட‌னை குடுத்த‌, ஏஞ்சாமி, ஊர்ப்ப‌ட்ட‌ ச‌ன‌த்து கொட‌லை உருவி மாலை போட்டு ஆடுன, ராச‌ப‌க்சேக்கு என்ன‌ த‌ண்ட‌னை குடுப்ப‌, எப்ப‌ குடுப்ப‌?

Sunday, June 14, 2009

தந்தி அடிக்கவும் - Current from Bug

டேய் த‌ம்பி, விடிய‌க்கால‌ம் வ‌ந்து வ‌டை மாவை க‌ர‌ண்டு போர‌துக்கு முன்னாடி ஆட்டிப்புடு. காலைல‌ 7 ம‌ணிக்கு அடிச்சு, சாங்கால‌ம் 6 ம‌ணிக்கு தான் விடுவாங்க‌லாம்.
இது ஏப்ரல் மாத‌ம் க‌முதியில் நான் கேட்ட‌ உரையாட‌ல். நான் வாழும், அமெரிக்காவில், மின் தடை என்ப‌து அபூர்வ‌ம். ஆனாலும், எதிர்கால‌ மின்சார‌த் தேவைக‌ளை க‌ருத்தில் கொண்டு தீவிர‌ ஆராய்ச்சிக‌ள் இங்கே ந‌டைபெருகின்ற‌ன‌. ஜியோபேக்ட‌ர் எனும் நுண்ணுயிரி, ந‌ம் உட‌லில் இருந்து வெளியேரும் க‌ழிவுக‌ளை உட்கொண்டு மின்சார‌த்தை அளிக்க‌க்கூடிய‌து. இந்த‌ ஆராய்ச்சியில் 1 ஆண்டு கால‌ம் ஈடுப‌ட்டேன். என் சிற்ற‌றிவிர்க்கு எட்டிய‌ வ‌ரையில், ஒரு சிறு ம‌கிழ்ஊர்தியை இய‌க்க‌ ஒரு ச‌ர‌க்குப்பெட்ட‌க‌ம் அள‌வு ஜியோபேக்ட‌ர் தேவை. அதே போல‌, இந்த‌ நுண்ணுயிரி அதிக‌ப‌ட்ச‌ம் ஒரு வார‌ கால‌ம் உயிர் வாழும். இத்த‌னை குறைக‌ள் இருந்தும், அமெரிக்க‌ அர‌சாங்க‌மும், டொயோடா போன்ற‌‌ முண்ண‌னி வாக‌ன‌ த‌யாரிப்பாள‌ர்க‌ளும் இந்த‌ ஆராய்ச்சிக்கு பொருளுத‌வி செய்து வ‌ருகின்ற‌னர். இந்த‌ ஜியோபேக்ட‌ர், முத‌ல் முத‌லில் பொடோமாக் ஆற்றில் இருந்து பிரித்து எடுக்க‌ப்ப‌ட்ட‌து. இதே நுண்ணுயிரி குடும்ப‌த்தை‌ச் சேர்ந்த‌ வேரு சில‌ நுண்ணுயிரிக‌ள், ராமேஸ்வ‌ர‌ம் க‌ட‌ற்ப‌குதியிலும் கிடைப்ப‌தாக‌ அறிகிறேன். த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் எதிர்கால‌ தேவை க‌ருதி, த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர், த‌மிழின‌ த‌லைவ‌ர், முத்த‌மிழ‌றிஞ‌ர், ஐயா டாக்ட‌ர் க‌லைஞ‌ர் அவ‌ர்க‌ள், இந்திய‌ பிர‌த‌ம‌ர் டாக்ட‌ர் ம‌ன்மோக‌ன் சிங் ம‌ற்றும், "சொக்க‌த்த‌ங்க‌ம்" அன்னை சோனியா காந்தி அவ‌ர்க‌ளுக்கும் ஒரு க‌டித‌ம் எழுத‌வோ, த‌ந்தி அடிக்க‌வோ ப‌குத்த‌றிவு ப‌க‌ல‌வ‌ன் த‌ந்தை பெரியார், டாக்ட‌ர் க‌லைஞ‌ர் அவ‌ர்க‌ளின் க‌ன‌வில் தோன்றி அறிவுறுத்த‌ வேண்டுகிறேன்.

Monday, June 8, 2009

வ‌ன்முறையின் தோல்வி

அ.தி.மு.க‌ வின் முதுகுள‌த்தூர் ஒன்றிய‌ செய‌லாள‌ர் முத்தும‌ணித் தேவ‌ர் என‌து த‌ந்தையை அழைத்து, இந்த‌ க‌டிதத்தை எழுதிய‌து யார் என‌ தெரிகிற‌தா என்று கேட்டு 2 மாத‌ங்க‌ளுக்கு பின்னாள் முத்தும‌ணித் தேவ‌ர் கொலை செய்யப்பட்டார். மொட்டை கடித‌த்தில் இருந்த‌து அவ‌ர் கொலை செய்ய‌ப‌ட‌ போவ‌த‌ற்கான‌ முன்ன‌றிவிப்பே. கொலையை க‌ற்பனை செய்ய‌ நினைப்ப‌வ‌ர்க‌ள், சீவ‌ல‌ப்பேரி பாண்டி ப‌ட‌த்தில், இன்றைய‌ ச‌மூக‌ ந‌ல‌த்துறை அமைச்ச‌ர் மாண்புமிகு நெப்போலிய‌ன் அவ‌ர்க‌ள் உத‌வியுட‌ன் ஊர் த‌லைவர் கொல்ல‌ப்ப‌டுவ‌தை பார்க்க வேண்டி இரைஞ்சுகிரேன். க‌முதியில் இருந்து அருப்புகோட்டை செல்லும் வ‌ழியில் ஒரு பிண‌ம் கிட‌ப்ப‌தாக‌ சொல்லி ஊர்ம‌க்க‌ளோடு நானும் ஒடி சென்று பார்தேன். நேதாஜி என்ப‌வ‌ரின் இடுப்புக்கு மேல் பாக‌ம் ஒரு ப‌குதியாக‌வும், கீழ் பாக‌ம் ஒரு ப‌குதியாக‌வும் கிட‌ந்த‌து. பின்னாளில் ப‌ம்பை கோவிந்த‌ன் என‌ப‌வ‌ர், குர‌ங்கு முத்தையா என்ப‌வ‌ருட‌ன் இந்த‌ கொலையை செய்த‌தாக‌ கைது செய்ய‌ப்ப‌ட்டார். குர‌ங்கு முத்தையா என்ப‌வ‌ர் ம‌துரையை சேர்ந்த‌ தொழில் முறை கொலைகார‌ர். இவ‌ரை முர‌ட‌ன் முத்தையா எனப்ப‌ட்ட‌ போலிஸ் எஸ். பி யுட‌ன் குழ‌ப்ப‌ வேண்டாம் என‌ இது வ‌ரை இந்த‌ ப‌திவை ப‌டிக்கும் அன்பு நெஞ்ச‌ங்க‌ளை கேட்டுக்கொள்கிறேன்! ப‌ம்பை கோவிந்த‌னின் மூன்று த‌னித்த‌ன்மைக‌ளை இங்கே குறிப்பிட‌ வேண்டும். 1. இவ‌ருடைய‌ முடி அல‌ங‌கார‌ம் கொல‌ம்பிய‌ கால்ப‌ந்தாட்ட‌ வீர‌ர் வால்ட‌ராமாவை ஒத்த‌து. வால்ட‌ராமா மிட்ஃபீல்ட‌ர் ஆக‌ ஆடிய‌ பொழுது, ஃபுல் பேக் விளையாடிய‌ எஸ்கோபர், பின்னாளில் கொல‌ம்பியாவில் சுட்டு கொல்ல‌ப்ப‌ட்டார். கார‌ண‌ம்: எஸ்கோபர் த‌ன் அணி கோல் கீப்ப‌ருக்கு உதைத்த‌ ப‌ந்து சேம் சைடு கோல் ஆக‌ மாறிய‌தே!
2. எங்க‌ளூர் பேருந்துக‌ளிலேயே டேப் ரெக்கார்ட‌ர் இல்லாத‌ கால‌த்தில் இவ‌ருடைய‌ என்ஃபீல்டு புல்ல‌ட்டில் டேப் ரெக்கார்ட‌ர் இருந்த‌து (யாழ்பாண‌த்து ப‌திவ‌ர் அண்ண‌ன் புல்ல‌ட் பாண்டி இந்த‌ அள‌வுக்கு தொழில் நுட்ப‌ வ‌ள‌ர்ச்சி அடைந்த‌வ‌ரா என்ப‌து என‌க்கு தெரியாது!). 3. இவ‌ர் அணிந்து இருந்த‌ க‌ணையாழியின் நீள‌ம் 4 இன்ச், அக‌ல‌ம் 4 இன்ச். இந்த‌ மோதிர‌ம் தொட‌ர்பு ப‌ட்ட‌ பின் ந‌வீன‌த்துவ‌ ப‌க‌டி ஒன்றை இங்கே குறிப்பிட‌ வேண்டும். நானும், என் த‌ந்தையும் அன்றைய‌ இந்திய‌ன் ஓவ‌ர்ஸீஸ் வ‌ங்கியின் மேலாள‌ர் க‌ருத்தப்பாண்டிய‌ன் உட‌ன் பேசிக்கொண்டு இருந்த‌ பொழுது உள்ளே வ‌ந்த‌ ப‌ம்பை கோவிந்த‌னிட‌ம், க‌ருத்தப்பாண்டிய‌ன் இப்ப‌டி கேட்டார் "அய்த்தான், வெலிக்கிப் போயிட்டு எப்ப‌டி க‌ழுவுகிறீர்க‌ள்! (இது ஒரு பின் ந‌வீன‌த்துவ‌ ப‌க‌டி என்று ம‌னுஷ‌னுக்கு தெரிந்து இருக்க‌ வாய்ப்பில்லை!). இது த‌விர‌ எத்துனையோ கொலைக‌ள். பிற்கால‌த்தில் I.I.T-Bombay, Chemistry Department டில் ஆராய்ச்சி ப‌ணியில் இருந்த‌ பொழுது ந‌ட‌ந்த‌ கொலை வித்தியாச‌மான‌து. க‌முதி ம‌சூதி முன் உள்ள‌ டீ க‌டையில் அதிகாலை 5 ம‌ணி.

சில‌ ம‌னித‌ர்க‌ள்: யேய், க‌டையை மூடு.
க‌டை ம‌னித‌ர்: விடிய‌க்கால‌ம் அப‌ச‌குன‌மா பேசாம‌ ஓடிப்போங்க‌டா.
ஒருவ‌ன் த‌ன் கையில் இருந்த‌ பையை திற‌ந்து காண்பித்த‌ உட‌ன் க‌டையை மூடி விட்டு ஒடி விடுகிறான் க‌டைக்கார‌ன்.

அந்த‌ பையை திற‌ந்து, ம‌சூதி முன் உள்ள‌ தெருவில் வைத்து விட்டு, ந‌ன்கு விடியும் வ‌ரை அந்த‌ கும்ப‌ல் அங்கேயே இருந்து விட்டு சென்ற‌‌து. கார‌ண‌ம், ம‌க்க‌ள் பார்க்கும் முன், ராம‌ரின் த‌லையை நாய் க‌டித்து விட்டால்! இந்த கொலைக‌ளை செய்த‌வ‌ர்க‌ளுக்கும் இதே க‌தி தான்.

இது வ‌ன்முறையின் தோல்வி என‌ ந‌ம்ப‌ நான்ன்ன்ன்ன்ன்ன்ன் ரெடி, நீங்க‌க‌க‌க‌க‌க‌க‌க ரெடியா!

ஆனால், வ‌ன்முறையை மிக‌ அருகில் இருந்து அனுப‌வித்த‌, அதை வெறுக்க‌ கூடிய‌ என்னால் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் வ‌ன்முறையை த‌ங்க‌ள் இன‌ விடுத‌லைக்கான‌ ஆயுத‌மாக‌ தெரிவு செய்த‌தை என்னால் வெறுக்க‌ முடிய‌வில்லை!

தெளிந்த‌ தெரிவு!

கன‌வை, க‌ன‌வாக‌வே வைத்திருப்ப‌வ‌னின்
க‌ன‌வு இருந்தால் என்ன‌, க‌லைந்தால் என்ன‌
என்ற வ‌ரிக‌ளை பிர‌பாக‌ர‌ன் கேட்டு இருக்க‌ வாய்ப்பு இல்லை. ஆனால் 30 ஆண்டு கால‌ம் த‌ன் க‌ன‌வான‌ ஈழ‌, இன‌ விடுத‌லைக்காக‌ போராடிய‌ மாவீர‌ன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்ப‌து தெரியாத‌ இன்றைய‌ நிலையில், ந‌ம‌க்கொரு த‌லைவனை தெரிவு செய்ய‌ வேண்டிய‌ அவ‌ச‌ர‌, அவ‌சிய‌ க‌ட‌மை இருக்கிற‌து. 20000 த‌மிழ‌ர்க‌ள் கொலை செய்ய‌ப்ப‌ட்ட‌ பொழுது, த‌ன் உட‌லின் ஒன்ப‌து துவார‌ங்க‌ளையும் மூடி கொண்டிருந்த‌ "க‌ள்ள‌ க‌ட‌வு சீட்டு" க‌ருணாவோ, ட‌க்ள‌சோ, ஆன‌ந்த‌ ச‌ங்க‌ரியோ, பிள்ளையானோ, தொண்டைமானோ, சித்தார்த‌னோ த‌மிழ் இன‌ விடுதலையை முன்னெடுத்து செல்ல‌ த‌குதி அற்ற‌வ‌ர்க‌ள். செ. ப‌த்ம‌னாத‌னுக்கும் இந்த‌ ந‌ப‌ர்க‌ளுக்கும் இன்றைய‌ சூழ‌ழில் பெரிய‌ வேறுபாடு ஒன்றும் இல்லை. த‌லைம‌றைவாக‌ வாழும் ம‌னித‌ரை த‌லைவ‌ராக‌ தெரிவு செய்வ‌து, மண் குதிரை ந‌ம்பி ஆற்றில் இற‌ங்குவ‌து போன்ற‌தே! கால‌த்தின் அருமை க‌ருதி உட‌ன‌டியாக‌ ஒரு த‌லைவ‌ன் தெரிவு செய்ய‌ ப‌டுவ‌து அவ‌சிய‌ம். 1984 இல், ஜெய‌வ‌ர்த‌னே கொடும்பாவி எரிக்க‌ அண்ண‌ண் வ‌ழுதி எழிற்கோ த‌லைமையில், என‌து 8 வ‌து வ‌ய‌தில் க‌முதி ந‌க‌ரில் ஊர்வ‌ல‌ம் சென்ற‌து முத‌ல் இன்று வ‌ரை ஈழ‌ போராட்ட‌த்தை க‌வ‌னித்து வ‌ருப‌வ‌ன் என்ற‌‌ முறையில் என‌து க‌ருத்தை இங்கே ப‌திவிடுகிறேன். இன்றைய‌ அவ‌சிய‌ம், ஒரு உல‌க‌றிந்த‌, த‌ன்ன‌ல‌ம் அற்ற‌ த‌லை‌மை. முக்க‌ண் முத‌ல்வ‌னே ஆனாலும், குற்ற‌ம் குற்ற‌மே என்ற கீர‌ன் ஒரு புல‌வ‌ன். மாவீர‌ன் நெப்போலிய‌ன் அளித்த‌ பாராட்டு ப‌த்திர‌த்தையே கிழித்தெரிந்த‌ பித்தோவான் ஒரு இசை க‌லைஞ‌ன். தான் நினைத்த‌தை நெஞ்சுர‌த்துட‌ன் க‌ட‌வுளுக்கும், ம‌ன்ன‌னுக்கும் அஞ்சாம‌ல் அறிவித்த‌ மாபெரும் ம‌னித‌ர்க‌ள் இவ‌ர்க‌ள். இவ்விருவ‌ராள் ச‌முதாய‌ மாற்ற‌ம் நிக‌ழ‌வில்லை. ஆனால், த‌ன் இன‌ ந‌ல‌னையே குறிகோள் ஆக‌ கொண்டு இசை வேள்வி ந‌ட‌த்தும் மாத‌ங்கி அருள்பிர‌காச‌ம் (M. I. A) என் அறிவுக்கு எட்டிய‌ வ‌ரையில் ஒரு சிற‌‌ந்த‌ த‌லைவ‌ர் ஆக‌ இருப்பார் என்ப‌து என‌து க‌ருத்து. உல‌க‌ த‌மிழின‌ம் இவ‌ர் பின் அணி வ‌குப்ப‌து இன்றைய‌ சூழ‌ழில் ஒரு தெளிந்த‌ தெரிவு!